விழுப்புரம்: ஆயந்தூர் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் தங்கள் ஊரில் மதுபானக்கடையை திறந்து வைக்க கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மதுக்கடையை அதிகாரிகள் மூடியதால் தற்போது மது அருந்த நீண்ட தூரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மதுப்பிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு மனு அளித்துள்ளனர்.
அப்போது மதுப்பிரியர் ஏழுமலை பேசுகையில், "எங்கள் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் நாங்கள் மது வாங்க 7 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டி உள்ளது. எங்கள் ஊரில் மதுக்கடை இல்லை என்பதால் அதிக விலை கொடுத்தும் கள்ளத்தனமாகவும் மதுபானங்களை வாங்கிக் குடிக்க வேண்டியுள்ளது.
இதனால் ஒரு நாளுக்கு 400 ரூபாய் சம்பாதிக்கும் நாங்கள் குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் போய்கிறது. வெளியூருக்கு சென்று மது அருந்துவதால் பலர் பணத்தை பறித்து செல்கின்றனர். அதனால் எங்கள் வசதிக்காக எங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையை திறக்க வேண்டும். அப்படி மதுபான கடை திறக்கவில்லை என்றால் நாங்கள் உயிர் இழந்துவிடுவோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு! சிறுநீரகம் செயலிழந்ததாக மருத்துவர்கள் சான்று!