கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆற்றில் கனிமவளத்துறை நிதியில் இருந்து ரூ. 33 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்கான பணியை இன்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் ரூ. 33 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து நீர் ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாட்டைக் காட்டிக் கொடுக்கின்ற கைக்கூலிகள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பாண்டியன், வானூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்துக் கடவுள்கள் மீது அவதூறு பரப்புவதாக யூ ட்யூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு!