விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய அவர், "2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைவிட தற்போது கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். சிறுபான்மையினர் அதிகமுள்ள மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது.
சிறுபான்மையினர் வாக்களித்துதான் தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பொத்தாம் பொதுவாக சிறுபான்மையினர் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சி.வி. சண்முகத்தின் கருத்து அதிமுகவின் கருத்தா என பார்க்க வேண்டும். இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்தகால அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்தான் தேர்தல் தோல்விக்கு காரணம்.
பொதுவெளியில் கூட்டணி தர்மத்தை மீறி சி.வி. சண்முகம் பேசியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது; கண்டிக்கத்தக்கது. இதில், உண்மை கிடையாது. பாஜக தொண்டர்கள் முழுமனதோடு தேர்தல் பணியாற்றினார்கள்.
அதேபோல, அதிமுக தொண்டர்களும் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் முழுமனதோடு தேர்தல் பணியாற்றினார்கள். சி.வி. சண்முகத்தின் கருத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியாது. சி.வி. சண்முகத்தின் கருத்து குறித்து அதிமுக தலைமைதான் விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியைச் சந்தித்தோம்- சி.வி. சண்முகம்