ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை, பாஜக கலைக்க முயற்சிப்பதாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னையில் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கே.எஸ்.அழகிரியின் கைது நடவடிக்கையை கண்டித்தும், ராஜஸ்தானில் நடைபெற்று வரும் ஜனநாயக படுகொலையை கண்டித்தும் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆர்.டி.வி.சீனுவாசகுமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது பரபரப்புடன் காணப்பட்டது.