விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. பருவமழை தொடங்கியதால் கோமுகி அணை நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின்பேரில் விவசாயிகளுக்காக கோமுகி அணையிலிருந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தண்ணீரை திறந்து வைத்தார். பழைய, புதிய ஆயக்கட்டு வாய்க்கால்கள் மூலம் 15 நாட்களுக்கு 150 கனஅடி வீதம் திறந்துவிடப்பட்டுள்ளது.
பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீர் 11 அணைக்கட்டுகள் வழியாக 40 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளை நிலங்கள் பயனடைகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாபு, முன்னாள் அமைச்சர் பா. மோகன், முன்னாள் மக்களவை உறுப்பினர் காமராஜ் கட்சி நிர்வாகிகள் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.