விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் தினேஷ் ஒன்பதாம் வகுப்பு படித்தார். பள்ளிகள் தற்போது மூடப்பட்டிருப்பதால் சிறுவன் தினேஷ் கட்சி கொடி கம்பம் நடும் பணிக்குச் சென்றார். அந்தவகையில் அவர் கடந்த 20ஆம் தேதி திமுக பிரமுகர் ஒருவரது இல்ல திருமண நிகழ்ச்சிக்காக அக்கட்சியின் கொடி கம்பம் நடும் பணியில் இருந்தார்.
அப்போது, அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்தார். இது குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிரவைக்கிறது.
கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையிலிருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.