கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலை இந்த பகுதியில் 5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த சாலை வழியாகச் சென்றால் நெடுஞ்சாலையை 2 கிலோமீட்டர் தொலைவில் கடந்துவிடலாம் எனவும், ஆனாலும் சரி செய்யாததால் நான்கு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அவசர வழியாகவும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் செல்வதற்கும், இதர பயணங்கள் மேற்கொள்வதற்கும் இந்த சாலை பெரும்பங்கு வகிக்கின்றது என்றும் ஆனால், சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பங்காரம் கிராம பொதுமக்கள் சாலைகளில் தேங்கி நிற்கும் சேற்றில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். நட்ட நாற்றுகளை வரும் தை மாதம் அறுவடை செய்யபோவதாக நாற்று நட்ட பெண்கள் வேடிக்கையாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தொடர்மழையால் சாலை துண்டிப்பு - அவதியில் பொதுமக்கள்!