விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனிமாவட்டமாக பிரித்து தனி மாவட்டமாக தொடங்கி வைக்கும் விழா கள்ளக்குறிச்சி சாமியார் மடம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த முதலமைச்சர் கூறுகையில், ‘வருங்காலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் கொண்டுவரப்படும். முதற்கட்டமாக கள்ளக்குறிச்சியில் ரூ.5 கோடி மதிப்பில் மிகப்பெரிய விளையாட்டு திடல் அமைக்கப்படும். ஏற்கனவே ரூ.128 கோடி மதிப்பீட்டில் பாலங்கள், சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் திண்டிவனத்தில் மிகப்பெரிய உணவுப் பூங்கா அமைக்கப்படும். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டிற்கான ஆடுகள், கோழிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் 5 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சுற்றுச்சாலை சுமார் 24 கிலோ மீட்டருக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரிஷிவந்தியத்தில் இருபால் மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசு கல்லூரி அமைக்கப்படும்" என்றார்.
விழாவில் ரூ.194 கோடி மதிப்பில் 518 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 5 ஆயிரத்து 873 பயனாளிகளுக்கு 24 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
![முப்பெரும் விழாவில் பங்கேற்றுள்ள தலைவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/eps3_2611newsroom_1574747441_414.jpg)
இதில் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார் ஆகியோருடன் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், தொண்டர்கள், பொதுமக்களென பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் கள்ளக்குறிச்சி வருகைக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரம்!