விழுப்புரம்: சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், இன்று (டிச.30) விழுப்புரத்தில் உள்ள பாலாஜி திருமண மண்டபத்தில், தன்னுடன் பயின்ற மாணவர்கள் மற்றும் தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் ஆகியோருடன் இணைந்து ஒரு கலந்துரையாடலை நடத்தினார். இதனை, முன்னாள் ரயில்வே பள்ளி மாணவர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் பேசிய சந்திரயான் விஞ்ஞானி வீரமுத்துவேல், “ஒழுக்கம், மன உறுதி, கட்டுப்பாடு ஆகியவைதான் என்னை தொடர்ந்து சந்திரயானில் பணியாற்றச் செய்தது. எவ்வளவோ பேர் இருந்தாலும், அந்த பணிக்காக நான் தேர்வு செய்யப்பட்டதை நினைத்துப் பார்த்து, இப்போதும் கூட நெகிழ்ந்து போகிறேன். ஒரு இடத்தில்கூட கவனம் சிதறாமல் தொடர்ந்து பணியாற்றக்கூடிய ஒரு இடம், அந்த ஆராய்ச்சி நிலையம்.
அதில், எந்த கவனச் சிதைவும் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இதற்கெல்லாம் காரணம், நான் பள்ளியில் படித்தபோது எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும், கல்லூரியில் எனக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுமே ஆவர். எனவே, உங்களை சந்தித்துப் பேச வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.
ஆனால், அதற்கு எனது வேலை ஒத்துழைக்கவில்லை. இன்று கூட நீங்கள் பேசுவதை அமர்ந்து கேட்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவலாக இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் நன்றி. குறிப்பாக ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கணவன் மீது புகாரளிக்க வந்த பெண்...சாதியின் பெயரைச் சொல்லித் தாக்கிய பெண் எஸ்.ஐ?