விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடைப் பணியாளர் சங்கம் சார்பாக, இதன் சிறப்புத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடைப் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடைப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத்தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளரிடம் பேசினார்.
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம்
அதில், 'நியாய விலைக்கடைப் பணியாளர்களுக்கு முதல் மாதம் முதல் தேதியில் ஏடிஎம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும்.
கரோனாவினால் உயிரிழந்த பணியாளருக்கு இழப்பீடு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். கூட்டுறவுத்துறையில் நியாய விலைக் கடைகளில் 3500 விற்பனையாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படும் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.
நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மாதம் 400 ரூபாய் வழங்கப்படவேண்டும். மேலும் பெண்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் எனக் கூறியும் இதுவரை செய்யவில்லை என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 11ஆம் தேதி மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகரங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என அவர் தெரிவித்தார்.