தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்துடன் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் இன்று விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் தீவிபத்தின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, பள்ளி வகுப்பறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதும், மாணவர்கள் அலறி அடித்து வகுப்பறையைவிட்டு வெளியே ஓடிவருகின்றனர். உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பள்ளிக்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனம் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும் மாணவர்கள் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது போன்ற நிகழ்வுகள் தத்ரூபமாக நடத்திக்காட்டப்பட்டது.
மேலும் தீ விபத்துகள் எவ்வாறு ஏற்படுகிறது? வீட்டில் மட்டுமின்றி, பொது இடங்களில் ஏற்படும் தீ விபத்திலிருந்து தங்களை உடனடியாகப் பாதுகாத்துக்கொள்வது, விபத்தில் படுகாயமடைந்தவர்களை எவ்வாறு மீட்பது போன்ற விழிப்புணர்வை மாணவர்களுக்குச் செய்து காட்டினர்.
இதுகுறித்து மாணவி மோனிகா கூறும்போது,
"இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதன்மூலம் விபத்து ஏற்படும்போது எவ்வித அச்சமும் இல்லாமல் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் மனநிலை எங்களுக்கு வந்துள்ளது.
இனி எந்தச் சூழ்நிலையிலும் எங்களைக் காப்பாற்றிக்கொள்வது, விபத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோம்" என்றார்.
இதையும் படியுங்க: வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - அரியவகை மூலிகைசெடிகள் எரிந்து நாசம்!