விழுப்புரத்தில் செய்தியாளர்களை தாக்க முயன்ற பாஜகவினர்... நடந்தது என்ன? - காலில் விழுந்து ஆள் கூட்டிவாங்க
Villupuram BJP meeting:விழுப்புரம் பாஜக ஆர்ப்பாட்டத்தில் 'சேர் காலியா இருக்கு.. காலில் விழுந்தாவது ஆள் கூட்டிவாங்க..அப்போ தான் நமிதாவை அழைத்து வர முடியும்' என மாவட்ட தலைவர் கலியவரதன் பேசினார். அப்போது, திடீரென செய்தியாளர்கள் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர் செய்தியாளர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published : Oct 28, 2023, 9:01 PM IST
விழுப்புரம்: பாஜக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகையை அனைத்து மகளிருக்கு வழங்க வலியுறுத்தியும், மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும் இன்று (அக். 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட நடிகையும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான நடிகை நமீதா கலந்து கொள்வார் என்று அறிவித்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்திற்கு போடப்பட்டு இருந்த 150 இருக்கைகளில் பாதிக்குமேல் காலியாக இருந்ததை கண்ட பாஜக மாவட்ட தலைவர் கலியவரதன் மேடையில் மைக்கைப் பிடித்து, "பாஜக தொண்டர்கள் அனைவரும் காலியாக உள்ள சேரில் வந்து உட்காருங்கள். பத்திரிக்கையாளர்கள் காலியாக உள்ள சேர்களை மட்டுமே படம் எடுக்கிறார்கள்.
உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். அங்கே நிற்கிற பாஜக நிர்வாகிகள், மற்றவர்கள் காலில் விழுந்து அவர்களை அழைத்து வந்து உட்கார செய்யுங்கள்" என்று பேசியது பார்வையாளர்கள் மத்தியில் நகைப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் கலிவரதன் ஆர்ப்பாட்டத்தில் இருக்கைகள் காலியாக இல்லாமல் நிரப்பினால் மட்டுமே நமிதாவை அழைக்க முடியும், தயவு கூர்ந்து இருக்கைகளை பாஜக தொண்டர்கள் நிரப்புங்கள், காலில் விழுந்து கூறுகிறேன் எனக் கூறிக் கொண்டே இருந்து வந்தார்.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு செய்தியாளர்களிடம் காலியாக இருக்கைகள் இருந்ததை ஏன் எடுத்தீர்கள், செய்தி வெளியிட கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு செய்தியாளர்களை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "தமிழக மக்களின் பிரச்சினை தீரணுமா..! அப்போ தாமரை மலரனும்..!" - நடிகை நமிதா!