விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களுக்கு அருகில் அமைந்துள்ள கடைகளில் பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாகர்ஷா வீதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், சோதனை செய்ததில் அங்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. கடையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வோர் மற்றும் இக்குற்றங்களுக்கு உடந்தையாக செயல்படுவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், குற்றவாளிகளை தடுப்புக்காவலில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.