விழுப்புரம்: விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு (ஜூன் 15) கனமழை பெய்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்து விழுப்புரம் நகரை இணைக்கும் முக்கிய தரைப்பாலமான கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இதனால் மக்கள் இன்று அதிகாலையில் இருந்து விழுப்புரம் நகருக்குள் பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தெரிவிக்க அரசு அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டும், அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தகவலை அறிந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அப்பகுதிக்கு நேரடியாக சென்று வெள்ள நீரில் இறங்கி பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டார். இதையடுத்து பொன்முடி கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இங்கு இருக்கும் இரண்டு மழை நீர் இறைக்கும் மின் மோட்டார்களை பராமரிக்காமல் வைத்துள்ளனர்.
இதன்காரணமாக இப்பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இனிவரும் காலங்களில் இப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அமைச்சர் பார்வையிட்டு சென்ற சில மணி நேரத்தில் மழை நீர் முற்றிலுமாக அகற்றப்பட்டு தரைப்பால சாலை சரி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பூங்கா பராமரிப்பு சரியில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை