விழுப்புரம்: விக்கிரவாண்டி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிவாசன் என்கிற பெயரில் மகேஷ் என்பவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிறுவனமானது ஒரத்தூர், திண்டிவனம், பொன்னங்குப்பம், வீடுர், மேலக்கொந்தை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த 3,500 நபர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.4 கோடியை சீட்டுப் பணமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீட்டு நடத்தியதாகக் கூறப்படும் மகேஷ் என்பவர், தான் நடத்தி வந்த நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பணம் செலுத்திய சீட் ஏஜெண்டுகள் மகேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘நாங்கள் மிகவும் ஏழ்மையாக சிறுக சிறுக சேமித்து நிறுவனத்தில் பணத்தைச் செலுத்தி வந்தோம். தற்போது அப்பணத்தை எடுத்துக் கொண்டு மகேஷ் தலைமறைவாகி விட்டார். இதனால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து, உடனடியாக மகேஷை கைது செய்து, எங்களுடைய பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு வழிவகை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்ததாகக் கூறினர்.
இதையும் படிங்க:கருக்கா வினோத்திற்கும் நீட் குறித்து பேச உரிமையுண்டு.. அண்ணாமலையும் பேசட்டும் - அமைச்சர் ரகுபதி!