விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது அரகண்டநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரம் ஒரு மூட்டை கம்பின் விலை 2200ல் இருந்து 2700 வரை வாங்கப்பட்டதாகவும், தற்போது இன்று ரூ. 1300ல் இருந்து ரூ. 1800 வரை மட்டுமே விலைக்குக் கேட்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விவசாயிகள் குறைந்த அளவில் கொண்டு வரும் தங்களது விலை பொருட்களுக்கு வங்கிக் கணக்கில் மட்டுமே பணம் பெற முடியும் என்பதால், வியாபாரிகள் உரிய நேரத்தில் பணம் செலுத்தாமல் இழுத்தடிகின்றனர் எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருக்கோவிலூர் - விழுப்புரம் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து அங்கு வந்த அரகண்டநல்லூர் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பொதுமக்களுக்கும் காவலருக்கும் இடையே சிறிது தள்ளு முள்ளு நிலவியது. பின்னர் திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் இரத்தினசபாபதி பொதுமக்களிடம் கம்பிற்கு உரிய விலை தருவதற்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கியவர்களைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்