முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்! - sasikala
சசிகலா குறித்து விமர்சித்ததால் தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் புகாரளித்துள்ளார்.
விழுப்புரம்: தனக்கு தொலைபேசியில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (ஜூன்.09) காவல் நிலையத்தில் புகராளித்துள்ளார்.
கடந்த 7ஆம் தேதி அமைச்சர் சி.வி. சண்முகம், சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளைக் கூறியுள்ளார். இதையடுத்து, அவரிடம் நேரடியாக பேசாமல் சிலர் அடியாட்களை வைத்து கைப்பேசி, சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் மூலம் ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பேசியும் பதிவிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள ரோசனை காவல் நிலையத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில், ”நான் வி.கே.சசிகலாவைப் பற்றி விமர்சனம் செய்து தொலைக்காட்சியில் பேட்டி அளித்த நாள் முதல் இன்றுவரை 500க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்துள்ளன.
அந்த அழைப்புகளில் ஆபாசமாகவும், எனது குடும்பத்தாரைக் கொன்று விடுவதாகவும் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வருவாய் துறையினர் துணையுடன் ஏரிகளில் மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!