விழுப்புரம்: கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சிறப்பு டிஜிபிக்கு உதவியதாக கூறப்படும் செங்கல்பட்டு எஸ்பியும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிசிஐடியினர் வழக்கு தொடர்பாக 127 சாட்சிகளை விசாரித்து, 73 ஆவணங்கள் அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் குற்றச் சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கு விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு அக்.27 ஆம் தேதி உத்தரவிட்டது.
இன்று (நவ.2) விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை நீதிபதி கோபிநாதன் நவம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக நேற்று (நவ.1) குற்றப்பத்திரிக்கை மற்றும் வழக்கு விவரங்கள் அடங்கிய நகல்கள் முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்பி தரப்பு வழக்கறிஞரிடம் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: தீபாவளிக் கொண்டாட்டம்: குழந்தைகளை வெளியில் அழைத்து வரவேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்