விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனிச்சைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். விவசாயம் செய்துவரும் இவர் மரக்காணத்தில் உள்ள தனியார் வங்கியில், விவசாய செலவுக்காக நகையை அடகு வைத்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க வந்தபோது, வங்கியில் மின்சாரம் இல்லாததால் சிறிதுநேரம் வெளியே நின்றுள்ளார்.
பின்னர் அருகிலிருந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றபோது, அவர் கையில் வைத்திருந்த ரூ.71 ஆயிரம் பணத்தை அவரது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு சாவியை வண்டியில்விட்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட 4 பேர் கொண்ட கும்பல், அவரது வண்டியிலிருந்த ரூ.71 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் வெளியே வந்த குணசேகரன் 71 ஆயிரம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகிலிருந்த மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.