விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்தியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் இன்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் நடுவே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், "விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் கருகிப் போய் உள்ளன. இதனால் விவசாயிகள் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரண நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யவும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி விவாதிக்க வேண்டும்" என்றார்.