விழுப்புரம்: கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகம். இவரது மகள் பிரவீனா. பன்னிரெண்டாம் வகுப்பில் 600 மதிப்பெண்ணுக்கு 331 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.
இவர் விழுப்புரம் எம்ஜிஆர் மகளிர் கலை கல்லூரியில் பி.ஏ. தமிழ் பாடப்பிரிவு கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் குறைந்த மதிப்பெண் இருந்ததால், இவருக்கு ஐந்து முறை விண்ணப்பித்தும் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவி பிரவீனா மற்றும் அவரது தந்தை சண்முகம், தாய் தமிழ்ச்செல்வி ஆகியோர் பலமுறை கல்லூரி முதல்வர் கணேசனை நேரில் பார்த்து இடம்கேட்டு வந்துள்ளனர். குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் பிரவீனாவிற்கு இடம் வழங்க முடியாது என முதல்வர் கணேசன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பிரவீனாவின் தந்தை சண்முகம் திடீரென தான் கொண்டு வந்த பெட்ரோலை தனது மகள், மனைவி மற்றும் அவர் மீதும் ஊற்றிக்கொண்டு கல்லூரி வளாகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அங்கிருந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை தலையில் ஊற்றி, அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்த சம்பவத்தையடுத்து விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் பிரவீனா மற்றும் அவரது தந்தை சண்முகத்திடம் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் மகளிர் கலைக் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, மாணவி பிரவீனாவின் தந்தை கூறுகையில், ”எனது மகளை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு இந்தக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், என் மகளுக்கு மட்டும் இடம் கிடைக்கவில்லை. எனவே, இதனால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன்” எனத் தெரிவித்தார்.
பின்னர் இதற்கு விளக்கம் அளித்த கல்லூரி முதல்வர் கணேசன், ”விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் கட் ஆஃப் முறையில் வரிசைப்படுத்தி முறையாக இடம் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி பிரவீனா குறைந்த மதிப்பெண் எடுத்து இருந்த காரணத்தால் இடம் வழங்க இயலவில்லை. இடம் கிடைக்காத கோபத்தில் பெற்றோர்களுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை தனியார் பள்ளி முன்பு நின்ற மர்ம கார்