கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கிராமத்தில் வசிக்கும் சேட்டு(47) என்பவர் அருண் மெடிக்கல்ஸ் என்ற மருந்துக் கடை மற்றும் போலி மருத்துவமனை நடத்தி வருவதாக அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு இணைதளம் மூலம் புகார் அளித்தனர்.
இதையடுத்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த சுகாதார இணை இயக்குனர் சண்முக கனி மற்றும் மருந்து ஆய்வாளர் தீபா, மருத்துவர் ராஜ்குமார் குழுவினர் போலி மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு நோயாளி ஒருவருக்கு ஊசி போட்டுக் கொண்டிருந்த போலி மருத்துவர் சேட்டு-வை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலி மருத்துவர் சேட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
உடனே மருத்துவர்கள் சங்கராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, போலி மருத்துவர் சேட்டு கடந்த 15 வருடங்களாக போலி மருந்து கடை மற்றும் போலி மருத்துவமனை நடத்திவந்தது தெரியவந்தது.
மருத்துவர்கள் நடத்திய ஆய்வின் போது கருக்கலைப்பு, ஊக்க மருந்து மாத்திரைகள், ஹார்மோன் ஊசிகள் உள்ளிட்ட சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட மாத்திரைகள், 42 வகையான ஊசி மருந்துகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
மேலும் அந்த ஆய்வின் போது, ஒரு அறையில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 750 ரூபாய் பணம் மற்றும் சட்டவிரோதமாக பயன்படுத்திய மருந்துப் பொருட்கள் அனைத்தையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டதை அடுத்து, சுகாதாரத்துறையினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய போலி மருத்துவர் சேட்டு என்பவரை தேடி வருகின்றனர்.
மேலும் இவருக்கு செல்லியம்பாளையம் மற்றும் மூறார் பாளையம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய சுகாதாரத் துறையினர், பொதுமக்கள் அருகாமையில் இருக்கும் அரசு மருத்துவமனை, அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் இது போன்ற மருந்துக் கடைகளில் போலி மருத்துவர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.