விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செஞ்சி சாலை பகுதியில் அங்காளம்மன் கோயில் அருகே பரணி மருந்தகம் நடத்திவருபவர் நரசிம்மன்.
இவர் பல ஆண்டுகளாக மருந்தகத்திலேயே நோயாளிகள் பலருக்கும் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இது குறித்து மாவட்ட சுகாதார நலத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட சுகாதார நலத்துறை இணை இயக்குநர் சுகந்தி தலைமையிலான மருத்துவ அலுவலர்கள் திண்டிவனம் செஞ்சி சாலையில் அமைந்துள்ள பரணி மருந்தகத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், நரசிம்மன் பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, தனியார் மருத்துவர் ஒருவரிடம் பணிபுரிந்து வந்த அனுபவத்தை வைத்து மருத்தும் பார்த்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, மாவட்ட சுகாதார நலத்துறையினர் போலி மருத்துவர் நரசிம்மனை திண்டிவனம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள், ‘திண்டிவனத்தில் போலி மருத்துவர்கள் மட்டுமல்லாது மருந்தகத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளும் விற்பனை செய்யப்படுகிறது. இதனையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்’ எனக் கோரிக்கைவிடுத்தனர்.