விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும், இவரது நண்பரான பாலு மற்றும் சையத் அமித் மூவரும் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான இடைத்தரகர்களாக இருந்தனர். இந்த நிலையில், இவர்கள் மூவரும் பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் வழங்கி வருவதாகவும், போலி கையெழுத்து, அரசு முத்திரைகளை பயன்படுத்துவதாகவும் மரக்காணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், போலீசார் நேற்று அய்யானரை பிடித்து விசாரித்தனர். அப்போது மூன்று பேரும் போலி சான்றிதழ் தயாரித்து பொதுமக்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அய்யனார், பாலு இருவரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சையத் அமித்தை போலீசார் தேடி வருகின்றனர். முதல்கட்ட தகவலில், அய்யனார் மரக்காணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பிறப்பு-இறப்பு பதிவேட்டை திருடி, அதன்மூலம் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: போலி சான்றிதழ் விவகாரம்: பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கைது!