விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரை அடுத்த கொட்டாமேடு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தரைப்பாலத்தை, உயர்த்தும் பணியில் தற்போது நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது. இதனால் அப்பாலத்தின் அருகே உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை சந்தித்து பிரச்னை குறித்து கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பொன்முடி, அம்மக்களுடன் சேர்ந்து இன்று மாவட்ட ஆட்சியரை காண நேரில் சென்றுள்ளார். அங்கு ஆட்சியர் இல்லாத காரணத்தால் அவரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, "கொட்டாமேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தை சரிசெய்தாலே போதும். அதைவிட்டுவிட்டு புதிய பாலம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இந்த அரசு இடையூறு கொடுத்து வருகிறது. இதுமட்டும் இன்றி விழுப்புரத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை சரிசெய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று முடிக்க வேண்டிய அனைத்து பணிகளும் தேர்தலுக்கு பின் செயல்படாமல் மந்தமான நிலையில் உள்ளது" என குற்றம்சாட்டினார்.