விழுப்புரம்: விழுப்புரத்தில் சி.வி. சண்முகம் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகப் பணியாற்றியவர் வெங்கடாசலம். இவர் தற்போது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அரசின் அச்சுறுத்தல்தான் இவருடைய தற்கொலைக்குக் காரணம்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வேலூர் பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளராக இருந்த ஒரு பெண் அலுவலர் வீட்டில் இரண்டே முக்கால் கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல்செய்யப்பட்டது. ஆனால் அப்போது அவர் கைதுசெய்யப்படவில்லை.
அதன்பின்னர் அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது, தற்போதுதான் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத் துறை அரசுக்கு ஆதரவாக அலுவலர்களை மிரட்டி, ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்பட்டுவருகிறது.
ஒவ்வொரு முறையும் திமுக மீது குற்றச்சாட்டு வருகின்றபோது அதன் காரணமாக யாராவது ஒருவர் தற்கொலை செய்துகொள்வார்கள். அப்படித்தான் அண்ணாநகர் ரமேஷ் தற்கொலை நடந்தது, 2ஜி வழக்கில் கனிமொழி மீது குற்றச்சாட்டு பாயும்போது சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டார்.
இதுபோன்ற பல சம்பவங்கள் திமுக ஆட்சி மாற்றம் நடக்கும்போதெல்லாம் தொடர்ந்து நடந்துகொண்டேவருகிறது. அலுவலர்கள் எதிர்க்கட்சியினரை மிரட்டும் வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலம் உயிரிழப்பில் சந்தேகம் இருக்கிறது. அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சேலம் தங்கும் விடுதியில் ராகிங்: ஆட்சியரிடம் மாணவிகள் புகார்