விழுப்புரம்: ஏனாதிமங்கலம் - கப்பூர் இடையேயான எல்லீஸ் தடுப்பணை மறுக்கட்டுமான பூமி பூஜை விழா நேற்று (நவ.24) நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பேசுகையில், “ஏனாதிமங்கலம் - கப்பூா் ஆகிய கிராமங்களுக்கிடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1949-50ஆம் ஆண்டு எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது.
இதன் வலதுபுற பிரதான கால்வாய்களான எரளூா், ரெட்டி வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதான கால்வாய்களான ஆழங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் வாய்க்கால்கள் மூலம்14 ஏரிகளுக்கும் செல்லும் நீரால், மொத்தம் 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணைக்கட்டு சேதமடைந்தது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அணைக்கட்டை சீரமைக்க மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள், விவசாயிகளின் கோரிக்கைகளும் மறு கட்டமைப்பிற்கான ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னர், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு தொடர்பான ஆய்வறிக்கை பொதுமக்கள், விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் ஆகியவை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டன. இந்த அணைக்கட்டை சீரமைப்பதை விட, மறு கட்டுமானப் பணிகள் செய்யலாம் என்ற முடிவுக்கு நீர்வளத் துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பரிந்துரைத்தனர்.
அதன் பேரில், தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில், எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு ரூ.86.25 கோடியில் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப் பேரவையில் அறிவித்தாா்.
அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, தற்போது பணிகள் தொடங்கியுள்ளன. இந்த அணைக்கட்டை மறுகட்டுமானம் செய்வதால், 26 ஏரிகளுக்கும் தண்ணீர் தடையின்றி சென்றடைந்து, 13,100 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி உறுதி செய்யப்படும். அணைக்கட்டைச் சுற்றியுள்ள 35 கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயரும்.
பணிகளைத் தரமாக மேற்கொள்ளவும், விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல, தளவனூரில் சேதமடைந்த அணைக்கட்டையும் பாா்வையிட்டு, அங்கும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, தளவானூர் அணையும் விரைவில் சீரமைக்கப்படும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இவ்விழாவில் விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனா்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரோபோக்கள், மோப்ப நாய்களுடன் திடீர் வெடிகுண்டு சோதனை.. காரணம் என்ன?