விழுப்புரம்: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6, 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
மொத்தம் 27 ஆயிரத்து மூன்று பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. அதன்படி, இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி இன்று (செப். 22) நிறைவுபெறுகிறது.
மனு தாக்கல்செய்ய இன்று கடைசி நாள் என்பதால் நேற்று முதலே ஏராளமானோர் ஆர்வமுடன் மனு தாக்கல்செய்தனர்.
அலுவலர்கள் ஆய்வு
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களை விழுப்புரம் தேர்தல் பார்வையாளர் கே.எஸ். பழனிச்சாமி, அம்மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். தேர்தல் பாதுகாப்புப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதிசெய்ய, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் பறக்கும் படைகளை அமைக்க மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு