விழுப்புரம்: திண்டிவனம் தாலுகா கர்ணாவூரில், கிராம உதவியாளராகப் பணிபுரிந்துவருபவர் ரகுராமன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும், ரகுராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜேஸ்வரி மகன்களை அங்கேயே விட்டுவிட்டு தனது தாய் ஊரான கள்ளக்குறிச்சி தியாகதுருகத்துக்குச் சென்றுவிட்டார்.
ராஜேஸ்வரி சென்று 20 நாள்கள் ஆன நிலையிலும் வீடு திரும்பவில்லை. இதனால், தாயைக் காண வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தார் ராஜேஸ்வரியின் இளைய மகன் சபரிநாத் (8). இதையடுத்து தனது தாயை நேரில் சென்று பார்க்க திட்டமிட்டான்.
தாயைக் காண வெகுதூரம் செல்ல வேண்டியிருந்ததால் தனது நண்பனிடம் சைக்கிளை வாங்கிக் கொண்டு தந்தையிடம் சொல்லாமல் புறப்பட்டான்.
விபத்துகள் அதிகம் ஏற்படக்கூடிய மயிலம் அருகேவுள்ள பாதிரிப்புலியூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மயிலம் காவல் ஆய்வாளர் கிருபாலட்சுமி, ‘இரவு நேரத்தில் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய், யார் நீ, எங்கேயிருந்து வருகிறாய்’ எனக் கேட்டார்.
அதற்கு சபரிநாத், “நான் தியாகதுருகத்திலுள்ள எனது தாய் ராஜேஸ்வரியைக் காண சைக்கிளிலேயே வந்துவிட்டேன். இரவு நேரம் என்பதால் செய்வதறியாமல் நின்றிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து, மயிலம் காவல் ஆய்வாளர் கிருபாலட்சுமி, தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு சிறுவனை அழைத்துச் சென்று நடந்தவற்றை அங்குள்ள காவல் ஆய்வாளர் ராமதாஸிடம் விவரித்துள்ளார்.
தாயைக் கண்டறிந்த காவல் துறை
காவல் ஆய்வாளர் ராமதாஸின் உத்தரவின்பேரில் அங்கிருந்த முதல் நிலைக் காவலர் ராதாகிருஷ்ணன், சபரிநாத் சொன்ன முகவரிக்குச் சென்று ராஜேஸ்வரியைத் தேடியுள்ளார். ஆனால், அவரது முகவரி சரியாகத் தெரியாத நிலையில் காவலரும் திண்டாடியுள்ளார்.
பின்னர் சபரிநாத், தனது பாட்டி செல்வி உணவகம் வைத்திருப்பதாகவும், தனது தாய் அங்கிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர் ராதாகிருஷ்ணன், சிறுவனின் பாட்டி செல்வியிடம் விசாரித்துள்ளார்.
அப்போது, தனது மகள்தான் ராஜேஸ்வரி எனக் கூறியதையடுத்து கடையின் உள்ளே இருந்த ராஜேஸ்வரியை அழைத்து காவலர் விசாரித்துள்ளார். விசாரணையில், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 20 நாள்களாக தாய் வீட்டில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிறுவன் தந்தையிடம் ஒப்படைப்பு
இது குறித்து காவலர் ராதாகிருஷ்ணன், மயிலம் காவல் துறையினருக்கும், தியாகதுருகம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மயிலம் காவல் துறையினர், சபரிநாத்தின் தந்தைக்கு அழைப்புவிடுத்து, நடந்தவற்றைக் கூறி சம்பவ இடத்திற்கு வரவைத்தனர்.
பின்னர், அங்கு பதறியடித்துக்கொண்டு வந்த ரகுராமிடம் சபரிநாத்தை பத்திரமாக ஒப்படைத்தனர். இது குறித்து அவரிடம் கேட்கும்போது, “சபரிநாத்தை இரண்டு மணி நேரமாகக் காணவில்லை என்று பல இடங்களில் தேடிவந்தேன்.
எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றேன். அப்போதுதான் எனக்கு சபரிநாத் இங்கு இருப்பதாக அழைப்புவந்தது” என்றார். தாயைக் காண சைக்கிளில் பயணம் செய்த இந்தச் சிறுவனின் செயல் காண்போரை கண்கலங்க செய்தாலும், இது பாதுகாப்பானது இல்லை என்பதே நிதர்சனம்.
தனது தாயை தேடி மகன் துடித்ததும், தனது மகனை காணவில்லை என தந்தை கலங்கியதும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல.
இதையும் படிங்க: சோனு சூட்டை அடிக்கிறியா ? - சீறிய சிறுவனால் உடைந்த டிவி