தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பச்சை மண்டலமாக உள்ள இடங்களில் மட்டும் மதுபானங்களை விற்பனை செய்து கொள்ளலாம் என தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இச்சமயத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சிலர் மது பாட்டில்களை எடுத்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தன.
இந்தப் புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வந்தனர். முடிவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சேர்ந்தமங்கலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை எடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மது கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் என எட்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.