தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை ஆதரித்து கூட்டணி கட்சியின் தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, விழுப்புரத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "திமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. பல கட்சிகள் ஒன்றிணைந்து கலப்பட கூட்டணி அமைத்துள்ளன. சட்டப்பேரவை மாண்புகளை களங்கப்படுத்திய கட்சி திமுக. சாதிக் பாட்சா மரணம் குறித்து விசாரணை கோரினால், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாட்டை ஆளும் தகுதி இல்லை. திமுக ஒரு குடும்ப கட்சி. ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களுக்கு திமுக நீதிமன்றம் மூலம் தடை வாங்குகிறது" என தெரிவித்தார். மேலும், தேர்தல் முடிந்தவுடன் அனைவரின் வங்கி கணக்கிலும் இரண்டாயிரம் செலுத்தப்படும் என்று தெரிவித்த அவர், விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.