விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகம் பேசியதாவது, 'கடந்த 1967ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டும் இல்லை என்றால் திமுக வெற்றி பெற்றிருக்காது.
அதனைப் போன்று திராவிடர் கழகமும் இருந்திருக்காது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போதைய முதலமைச்சராக இருந்திருக்க முடியாது, கோபாலபுரமும் இருந்திருக்காது. கருணாநிதி என்பவரே தமிழ்நாட்டில் இருந்திருக்க மாட்டார். தற்போது அரசியலமைப்புச் சட்டத்தை பற்றி தெரியாத அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் இருந்திருக்க மாட்டார்.
தற்போதைய முதலமைச்சரின்கீழ் இருக்கும் அமைச்சர்கள் அவருக்கு தரகர்களாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். தற்போதைய ஆட்சி கட்டிலில் இருக்கும் திமுக அரசே உங்களுக்கு திராணி இருக்கிறதா? இருந்தால் நாங்கள் மக்களுக்காக ஒரு நல்ல செயல் திட்டத்தை கொண்டு வந்தோம் என்று உங்களால் கூற முடியுமா? திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களே அவர்களை போலியானவர்கள் என்று அடையாளம் காட்டிவிட்டது. 33 தனி குழுக்களை அமைத்தார்கள். அது இன்றளவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா என்பது அவர்களுக்கே தெரியாது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் நமது அம்மா அவர்களும் முன்னாள் முதலமைச்சர் நம்முடைய எடப்பாடி பழனிசாமி அவர்களும் பல மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை கொண்டு வந்தனர். ஆனால், தற்போது புதிதாக பதவியேற்ற அரசானது அதனை மறைத்து தாங்களே புதிதாக இத்திட்டங்களை கொண்டு வந்தது போல் ஏமாற்று வேலையை மக்களிடம் காண்பிக்கின்றனர். நமது எடப்பாடியார் 2000 அம்மா மருத்துவமனை கிளினிக் திட்டத்தை ஒரே நாளில் செயல்படுத்தினார். ஆனால், அதனை தற்போதைய திமுக ஒரே நாளில் முடக்கிவிட்டது.
இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தமது ஆட்சிக்காலத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை கொண்டு வந்ததாகவும் இதனால் ஒரு கோடி மக்கள் பயனடைந்ததாகவும் கூறினார். ஆனால், அவரின் ஆட்சியின் கீழ் செயல்படும் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக செயல்படும் மா.சுப்பிரமணியன் அவர்களின் தலைமையின் நிர்வாகமானது மக்களைத் தேடி மருத்துவ திட்டம் முறையாக பொது மக்களிடம் சென்று சேரவில்லை என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டது.
அவர்களின் அறிக்கையே அவர்களின் முகத்திரையைக் கிழித்தது. ஒரு கோடி பேருக்கு உண்டான மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் தங்களிடம் இல்லை என்ற ஆய்வு அறிக்கை வெளியிட்டது. இதிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அரசானது முழுக்க முழுக்க பொய்யாக நடைபெற்று வருகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியினுடைய லட்சணம் தன்னுடைய அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஆளத் தெரியாமல் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஒரு முதலமைச்சர் இந்த ஸ்டாலின் அவர்கள் தான்.
தங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினீர்கள். ஆனால், தற்பொழுது உங்களுடைய சுகாதாரத்துறையானது நீட் தேர்வினை ரத்து செய்ததா? பல மாணவர்கள் நீட் தேர்வினால் உங்களுடைய ஆட்சிக்காலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது கவர்னரிடம் அனுமதி பெற்று மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு முறையை ரத்து செய்ய உங்களுக்கு வக்கில்லை என்று கூறினீர்கள்.
மத்திய அரசு நீட் தேர்வு முறை கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டாலும் அதனை நீக்கும் நடைமுறை உச்ச நீதிமன்றத்தின் கையிலேயே உள்ளது. மத்திய அரசால் அதனை நீக்க முடியாது என்கிற கருத்தை மனதில் கொண்டே இதனால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை இந்தியாவிலேயே கொண்டு வந்த ஒரே அரசு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு மட்டுமே' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"ஆட்சேர்ப்பில் மத்திய அரசு வெளிப்படையாக செயல்படுகிறது" - பிரதமர் மோடி