விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க. பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "முதலமைச்சர் நேற்று வாய்க்கு வந்தபடி கோயம்புத்தூரில் உளறியுள்ளார். திமுக தலைவர் அடிக்கடி சொல்வது போலவே 'கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்' எனச் செயல்படும் தமிழ்நாடு அரசு திமுக தலைவரை குறைசொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.
ஸ்டாலின் மக்களின் ஆதரவோடு முதலமைச்சராக விரும்புகிறார். எடப்பாடி பழனிசாமியைப் போல மற்றவர்களின் காலைப்பிடித்து முதலமைச்சராக அவர் விரும்பவில்லை. இதில் வேடிக்கையான செய்தி என்னவெனில் நோய்ப் பரவலைத் தடுத்தி நிறுத்தியுள்ளதாகச் சொல்கிறார். கணக்குதான் தெரியவில்லை என்றால், அரசியலும் தெரியவில்லை, நிர்வாகமும் தெரியவில்லை, புள்ளிவிவரங்களும் தெரியவில்லை.
கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர், ”யாரும் இந்நோயைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் இந்நோய் வராது” என்று தெரிவித்தார். இப்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார். சென்னையில் ஊரடங்கு இருக்காது என்றார்.
இரண்டே நாளில் ஊரடங்கு என்று அறிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் முகக்கவசம், 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு என அனைத்து யோசனைகளையும் கூறியது ஸ்டாலின்தான். அதைத் தான் இந்த அரசு தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் செய்வதைப் பாராட்ட வேண்டும். அதைத் தடுக்கக் கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைவருக்கும் நிவாரணம் அளித்தது திமுகதான். அதனால்தான் பயந்து போய் எடப்பாடி பழனிச்சாமி உளறியுள்ளார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு யார் அவர்கள், எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன கேலி செய்யும் தோரணையில் முதலமைச்சர் பேசுகிறார்.
முதலில் முதலமைச்சர் சரியாகத் தமிழைப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். செய்வினை, செயப்பாட்டு வினை கூட தெரியாமல் வாய்க்கு வந்தபடி தமிழைப் பேசுகிறார். எதிர்க்கட்சியை குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொள்ளாமல், கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.