விழுப்புரம்: மாவட்டம் வானூர் அருகேவுள்ள பூந்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த திமுக ஆட்சியின்போது, அமைச்சர் பொன்முடி, அவரது மகன், உறவினர்கள் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2012ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான கவுதம் சிகாமணி உள்ளிட்டோர் ஆஜராகினர்.
அப்போது, இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான நகலை வழங்குவதற்காக இரண்டு முறை உள்ளே அழைத்து பின்பு காத்திருக்க வைத்தனர்.
சுமார் 4 மணி நேரமாக நடந்த விசாரணைக்குப் பிறகு வழக்கை அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பயிற்சி மருத்துவர்களின் பணி நேரம் குறித்த வழக்கு - மருத்துவக் கல்வி இயக்குநர் கண்காணிக்க உத்தரவு!