விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வழி மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், தாங்கள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாகக் கூறி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் பேசுகையில், ”மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்துக்கு செல்லும் வழி மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்வரை சாலை வசதி செய்து தரவேண்டும். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் நுழைவு வாயிலானது மணல் பகுதியாக இருப்பதால் தவழ்ந்து செல்பவர்கள் சக்கர நாற்காலியில் செல்வதற்கு சிரமப்பட்டுவருகிறார்கள். எனவே அந்த இடத்தை சரிசெய்து தர வேண்டும். காரில் வந்து இறங்கும் அலுவலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மேடை அமைத்து தருபவர்கள் எங்களுக்கு இந்த சிறிய உதவியை செய்வதற்கு தயங்குவது ஏன்? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஆவின் பாலகம் வைப்பதற்கு முகவர் உரிமம் பெற்றுள்ள உரிமையாளர்கள் அனைவருக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூபாய் 50 ஆயிரம் மானியத்துடன் வழங்கும் ஆவின் உபபொருட்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: சரபங்கா திட்டத்தினை மறுபரிசீலனை செய்ய விவசாயிகள் கோரிக்கை