விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டியலின சமுதாய குடும்பத்தினரும், 500க்கும் மேற்பட்ட மாற்றுசமுதாய மக்களும் வசித்துவருகிறார்கள்
இத்தகைய சூழலில், பட்டியலின மக்களுக்கு இந்நாள் வரை நிலையான இடுகாடு இல்லாததால் இறந்தவரின் உடலை ஏரி, ஓடை, குளம் போன்றப்பகுதிகளில் புதைத்து வந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு பல முறை மனு கொடுத்தும் நிலையாக இடுகாடு அமைத்து தராமல் தற்காலிகமாக ஒரு சில இடங்களை அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு மட்டுமே அமைத்து கொடுத்தனர், என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இத்தகைய சூழலில் கடந்த 18.5.2022 அன்று இரவு கொட்டியாம்பூண்டி கிராமத்தைச்சேர்ந்த சத்யநாராயணன் என்பவரின் மனைவி அமுதா இறந்த நிலையில், உடலை அடக்கம் செய்வதற்கு 19.5.2022 அன்று விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில், ஓர் இடத்தை தேர்வு செய்து உடலை அடக்கம் செய்வதற்கான பணியை மேற்கொண்டபோது மாற்று சமூகத்தினர் தடுத்துவிட்டனர். இந்நிலையில் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பின், இன்று மாலை அமுதாவின் உடல், அவ்வூரின் சாலையோரத்தில் எரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பட்டியலின மக்கள் தங்களுக்கு நிலையான இடுகாடு அமைத்துத்தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் கோரிக்கை வைத்தனர். இதையொட்டி, இரு சமூகத்தினரையும் அழைத்துப் பேசி சுமுக முடிவு எடுக்க,வரும் 26ஆம் தேதி பொதுக்கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர். பிரச்னை நேற்று முதல் இரு சமூகத்தினரிடையே நீடித்துவருவதால், கொட்டியாம்பூண்டி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருக்கோவிலூர் மாணவர் கொலை வழக்கு - கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது