விழுப்புரத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொது சுகாதாரத் துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் வகையில் வயிற்றுப்போக்கு சிறப்பு தடுப்பு முகாம் மே 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஜூன் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தவும், ஓ.ஆர்.எஸ். கரைசல், துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படும். இந்த முகாமில் இளம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் முறைகளை மேம்படுத்த சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள மூன்று லட்சத்து 24 ஆயிரத்து 795 குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல்களை கிராம செவிலியர், அங்கன்வாடி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வழங்குவார்கள்.
இந்த முகாமில் சுகாதாரத் துறையுடன் இணைந்து கல்வித் துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டம், குடிநீர் வடிகால் வாரியம் ஊரக வளர்ச்சித் துறையினர் இணைந்து செயல்பட உள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.