விழுப்புரம்: நகரின் கா.குப்பம் பகுதி மக்கள் விவசாய நீர் பாசனத்திற்காக அப்பகுதியிலுள்ள கா.குப்பம் ஏரியை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2007 ஆம் ஆண்டு 'பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம்' என்ற திட்டத்தை கா.குப்பம் ஏரியில் அரசு கொண்டு வந்தது.
இத்திட்டத்தில் சில மாதங்கள் மட்டுமே முறையாக கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து ஏரியில் விட்டுள்ளனர். காலப்போக்கில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், சாக்கடை நீரை அப்படியே நேரடியாக ஏரியில் கலக்க விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தகைய மாசு கலந்த நீரால் நிலத்தடி நீர் மாசு அடைவதுடன், குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து மங்கலாகவும் வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்கா.குப்பம், பொய்யப்பாக்கம், இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், கட்டபொம்மன் நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய்களும் மற்றும் தோல் நோய்களும் பரவி வருகின்றன.
இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களும் முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருவதால் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளிவரும் கழிவு நீரில் ரசாயனக் கழிவுகளும் மலக்கழிவுகளும் கலந்து வெளிவருவதால் அதில் வளர்ந்த மேய்ச்சல்களை உண்ணும் கால்நடைகளுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே விழுப்புரம் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை இணைந்து பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்திற்காக கா.குப்பம் ஏரியில் மீண்டும் புதிதாக பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இதற்கு அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம், இந்த ஏரியை முறையாக புனரமைத்து ஆகாயத் தாமரைகளை நீக்கி தகுந்தவாறு சுற்றிலும் கரையை எழுப்பவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கா.குப்பம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து நிரந்தரமாக மூடுவதுடன், புதிதாக கொண்டுவரப்படும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமரின் வீடு தீக்கிரை, அதிபர் ராஜினாமா- என்ன நடக்கிறது இலங்கையில்? டாப்-10 தகவல்கள்