விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவித்த அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்ட அன்றைய தினம் விழுப்புரம் பழைய தாலுகா அலுவலகக் கட்டடத்தில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பல்கலைக்கழகம் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 31) சட்ட முன்வடிவு தாக்கல்செய்யப்பட்டது. இந்நிலையில் அதனைக் கண்டித்தும், சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இன்று காலை விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக சி.வி. சண்முகம் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
காவல் துறையினர் அனுமதியின்றி திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சி.வி. சண்முகம் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை முன்பாக மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரும் சுமார் 100 பேர் கைதுசெய்யப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.