இந்தியாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் தமிழ்நாட்டில் இதுவரை 728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு, சமூக விலகல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் விழுப்புரம் கரோனா தடுப்புச் சிறப்பு மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சைப் பெற்று வந்த 26 பேருக்கு கரோனா தொற்றில்லை என சுகாதாரத் துறை அலுவலர்கள் அவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் நான்கு பேருக்கு பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை அலுவலர்கள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், டெல்லியைச் சேர்ந்த நபர் மட்டும் மாயமாகியுள்ளார். இவரை விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புது டெல்லி படேல் நகரைச் சேர்ந்த நபர், சமையல் கலை படித்துவிட்டு வேலைத்தேடி புதுச்சேரிக்கு அண்மையில் வந்துள்ளார். அங்கு வாகன விபத்து ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர் மார்ச் 21ஆம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் வந்தவர், லாரி மூலம் டெல்லி செல்வதற்காக திட்டமிட்டிருந்தார்.
அவரிடம் பணம் இல்லாததால் உணவுக்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலக உணவகம்,பேருந்து நிலையம், கடை வீதி ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். இதற்கிடையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் படுத்திருந்தவரை கடந்த வாரம் காவல்துறையினர் மீட்டு கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விழுப்புரம் கரோனா தடுப்பு அரசு சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சந்தேகத்தின் பேரில் அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்துவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதாரத்துறை அலுவலர்கள் அவரை மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததும் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு, சமூக விலகலை கடைபிடித்து வரும் நிலையில், அலுவலர்களின் இந்த பொறுப்பற்ற செயலால் விழுப்புரம் மாவட்டம் "சமூக பரவல்" என்ற மூன்றாம் நிலைக்கு சென்று விடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கிருமி நாசினி சுரங்கப் பாதையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்