விழுப்புரம்: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 39வது பிறந்தநாளை ஒட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில் கடந்த ஜூலை 5ஆம் தேதி 39 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நிகழ்வுக்கு தலைமை தாங்கி ஜோடிகளுக்கு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த 39 ஜோடிகளில் சிலர் முன்பே திருமணமானவர்கள் என்றும், அதில் குறிப்பிட்ட சிலருக்கு முன்பாகவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி விமர்சனத்திற்குள்ளானது.
இந்த நிலையில், அங்கு திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியின் குழந்தைக்கு நேற்றைய முன்தினம் (ஜூலை 6) பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும், திருமணத்தில் கலந்து கொண்ட இரு தம்பதிகளுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், மீண்டும் அண்ணாமலை தலைமையில் நேற்றைய முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
திருமணம் செய்து வைக்கப்பட்ட 39 ஜோடிகளில், திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான கிறிஸ்டோபர் மற்றும் எபினேசர் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அண்ணன் எபினேசருக்கு ஒரு குழந்தையும், தம்பி கிறிஸ்டோபருக்கு இரண்டு குழந்தையும் உள்ளதாம்.
அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் என்ற இளைஞருக்கு இதற்கு முன்னர் மயிலம் முருகன் கோயிவில் திருமணம் ஆனதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த திருமண விழா அதிமுகவின் நிர்வாகியும் புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரான எஸ்.முரளி என்ற ரகுராமன் ஏற்பாட்டில் நடந்ததாகவும், இதனையடுத்து எஸ்.முரளி என்ற ரகுராமனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அதிமுக கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் எஸ்.முரளி என்ற ரகுராமன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.
திருமணமான மறுநாளில் குழந்தைக்கு பிறந்தநாள் விழாவாம் என நெட்டிசன்கள் இந்த நிகழ்வை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும், திருமணமானவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்த அண்ணாமலையில் செயலையும் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000: ‘இதனால் திமுகவுக்கு மட்டுமே நன்மை’ - ஜெயக்குமார்