நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விழுப்புர மாவட்டம் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இன்றுவரை 50 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 38 நபர்கள் விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்டவர்களாகவும், 26 நபர்கள் வேறு வேறு தெருக்களில் வசித்தும் வருகின்றனர்.
எனவே பொது மக்கள் அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, விழுப்புரம் நகராட்சியை நோக்கி உள்ளே வரக்கூடிய 32 கிளை சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, உள்ளே வராத வண்ணம் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
ஒருவேளை பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான அத்தாட்சிகளுடன் உள் வழிச்சாலையான அய்யங்கோயில்பட்டு (அண்ணாமலை உணவகம்) சாலை மற்றும் ஜானகிபுரம் சாலை ஆகிய வழித்தடங்களின் வழியாக மட்டுமே நகரத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.
எனவே, விழுப்புரம் நகரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் பாதுகாப்புக் கருதியும், கிராமத்துக்கு கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காகவும் அவசிய தேவைகளில்லாமல் விழுப்புரம் நகரத்துக்கு வர வேண்டாம் என்றும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு : சிறப்பு அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை