விழுப்புரம்: தமிழ் சினிமாவில் 90களில் காமெடி வேடங்களில் நடித்தவர், சின்னி ஜெயந்த். இவருடைய மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன், கடந்த 2019ஆம் ஆண்டு யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீஸ் தேர்வில், 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மைப் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. பின் வெளிமாநிலங்களில் களப்பணி பயிற்சி பெற்றனர். ஸ்ருதன்ஜெய் நாராயணனுக்கு பயிற்சி காலம் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக பணியாற்றினார்.
அதன்பின், தூத்துக்குடி மாவட்ட பயிற்சி துணை ஆட்சியராகவும், திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராகவும் பணியாற்றினார். முன்னதாக, விழுப்புரம் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பதவி வகித்த சித்ரா விஜய், தற்போது மகளிர் மேம்பாட்டு செயலாளராக பதவி பெற்று சென்று உள்ளார். இதன் காரணமாக, விழுப்புரத்தில் துணை ஆட்சியர் பணி கடந்த இரண்டு மாதங்களாக காலியாக இருந்தது.
இந்நிலையில், தற்போது அந்த இடத்திற்கு ஸ்ருதன்ஜெய் நாராயனண் கூடுதல் துணை ஆட்சியராக (ஊரக வளர்ச்சி) விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இன்று (அக்.18) பொறுப்பேற்றுக் கொண்டார். சின்னி ஜெயந்த் மகனுக்கு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:உலகக் கோப்பை போட்டி: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீடிப்பு - டிக்கெட் பத்திரம்!