நிலவில் ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திராயன்-3 திட்டத்தை நிறைவேற்ற முனைப்புக் காட்டி வருகிறது. இதையொட்டி இந்தத் திட்டத்தின் இயக்குநராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் (41) என்பவரை இஸ்ரோ நியமனம் செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வ.உ.சி. நகரில் வசித்துவரும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் மகன் வீரமுத்துவேல். 1978ஆம் ஆண்டு பிறந்த இவர், விழுப்புரம் ரயில்வே பள்ளியில் படிப்பையும், ஏழுமலையான் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டய (டிப்ளமோ) படிப்பையும் முடித்துள்ளார்.
பின்னர் சென்னையில் இளங்கலை பொறியியல் படிப்பையும், திருச்சியில் முதுகலை பொறியியல் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார். திருமணமாகி இவருக்கு கவிதா என்கிற மனைவியும், ருவென்டிகா என்கிற மகளும் உள்ளனர்.
இதையும் படிங்க: சந்திராயன்-3 திட்டம் நிச்சயம் உண்டு - இஸ்ரோ தலைவர் சிவன்
இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வீரமுத்துவேல், 2004ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானியாக பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திராயன்-3 திட்டத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சிவதாணுபிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகியோர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழர் இந்த வரிசையில் இடம் பிடித்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் படிக்க: 'இந்தியாவை ஏளனமாகப் பார்த்த நாடு ரஷ்யா' - கலங்கிய மயில்சாமி அண்ணாதுரை