விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் உள்ள செந்தில் என்பவரின் மனைவி நந்தினி. இவர் நேற்றிரவு வீட்டின் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென நந்தினியின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியிருக்கிறான். இதனால் அதிர்ச்சியடைந்த நந்தினி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அப்போது அருகிலிருந்த நந்தினியின் அக்கா அந்தத் திருடனை துரத்தி ஓடிய போது, அவரின் முகத்தில் மயக்க மருந்தை அடித்து கீழே தள்ளி விட்டு தப்பிச்சென்றுள்ளான். இதனால் அவரது அக்கா மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு அங்கு வந்த காவல்துறையினர், நள்ளிரவில் ஊரை சுற்றி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் திருடன் குறித்த எந்த தடையமும் கிடைக்காததால், அப்பகுதியில் மேற்படி விசாரணை நடத்திவருகின்றனர்.