கடலுார் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் வீரா (எ) வீராங்கன்(35). பிரபல ரவுடியான இவரை, கடந்த 16ஆம் தேதி இரவு பத்து பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருப்பாதிரிபுலியூர், மார்கெட் காலனியை சேர்ந்த அருண்பாண்டியன், சுதாகர், ரமணன், ராஜசேகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த காவல் சார்பு ஆய்வாளர் தீபனை கத்தியால் குத்திவிட்டு தப்பிசெல்ல முயன்ற கிருஷ்ணன் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திருப்பாதிரிபுலியூர், குப்பன்குளம், சி.எம்.சி., காலனியை சேர்ந்த சாமிநாதன், ஸ்டீபன்ராஜ், ஜீவா ஆகியோர் கடந்த 19ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவர்களைத் தவிர, இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை காவலர்கள் தேடி வந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கடலுார், குப்பன்குளம், சி.எம்.சி., காலனியை சேர்ந்த ராஜா என்பவரது மகன்கள் விக்ரம்(27), ராக்கி(25) ஆகிய இருவரும் இன்று விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1இல் சரணடைந்தனர்.
இதையடுத்து, நீதிபதி அருண்குமார் உத்தரவின் பேரில், இருவரும் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.