கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் பழைய இரும்பு கடை நடத்திவருகிறார். இவரது மகன் முகுந்த்(9) தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் தனது பாட்டி லட்சுமியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணி நடைபெற்ற இடத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு பெரிய அளவிலான மீன் குட்டை இருந்துள்ளது. அதைப்பார்த்த முகுந்த் மீன் குட்டையில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகச் சேற்றில் அவர் கால் சிக்கியுள்ளது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனைக் காப்பாற்ற முயற்சி செய்தும், சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுவனின் உடலை சடலமாக மீட்டனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.