சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் நேற்று மாலை 4 மணிக்கு தொடர்புகொண்டு, நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சென்று சோதனை மேற்கொண்டபோது, வந்த தகவல் புரளி என தெரியவந்தது.
இதனையடுத்து அந்த நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்தபோது விழுப்புரம் மாவட்டத்தை காண்பித்துள்ளது. மேலும் அந்த செல்போன் எண் விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஷ்வரன் (20)என்பவருடையது என தெரியவந்துள்ளது. இதனால் விழுப்புரம் போலீசார் உடனடியாக விரைந்து புவனேஷ்வரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், புவனேஷ்வர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிகிறது. இவர் ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.