விழுப்புரம் மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டிருந்தது. மேலும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் மற்றும் காணை உள்ளிட்டப் பகுதியில் பாஜக சார்பில் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அழித்ததாக பாஜக சார்பில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அக்கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜக மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் தலைமையில் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.