விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக பச்சைக்கிளிகள் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின்பேரில் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், அப்போது அவலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரின் வீட்டில் பிறந்த குட்டிக்கிளி முதல் வளர்ந்த பெரிய பச்சைக்கிளிகள் வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட கிளிகளைத் தனித்தனியாகப் பிரித்துவைத்து வளர்த்துவந்ததைக் கண்டுபிடித்ததோடு, அவரிடமிருந்து அவற்றைப் பறிமுதல்செய்தனர்.
இவ்வாறு வளர்க்கப்படும் கிளிகளை வீட்டில் வளர்ப்பதற்கும், ஜோசியம் சொல்பவர்களுக்கும் விற்பனைசெய்ய ஜோடி 300 முதல் 800 ரூபாய்வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவ்வகையான கிளிகள் மாசி மாதத்தில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய மாதமாக உள்ளதால், பச்சைக்கிளிகளை காடுகளிலிருந்து கிராமத்து இளைஞர்கள் மரத்தில் முட்டையிடும் குஞ்சுகளை 100 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்துவந்துள்ளனர்.
வனப்பறவைகளில் அழிந்துவரும் இனமாகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இனப்பறவையான பச்சைக்கிளிகளை சட்டவிரோதமாக வளர்த்து விற்பனை செய்துவந்ததைப் பொதுமக்கள் அறிந்து அவலூர்பேட்டை காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர்.
இதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான காவலர்கள் சோதனை செய்து 500-க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகளைப் பறிமுதல்செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத் துறையினர் வளர்த்துப் பாதுகாத்து பறக்கும் காலங்களில் கிளிகளை காட்டில் விட்டுவிடப்போவதாகத் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிவகாசியில் பறக்கும் படை பறிமுதல் செய்த 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு!